தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் ஆர்.என். ரவி இன்று தனது உரையைப் படிக்காமல் வெளிநடப்பு செய்தார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தான் ஏன் வெளிநடப்பு செய்தேன் என்பது குறித்து ஆளுநர் மாளிகை சார்பில் விரிவான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சட்டப்பேரவையில் ஆளுநரின் ஒலிவாங்கி (மைக்) பலமுறை அணைக்கப்பட்டதாகவும், அவர் பேசுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மேலும், தமிழக அரசு தயாரித்து வழங்கிய ஆளுநர் உரையில், பல தகவல்கள் ஆதாரமற்றதாகவும், தவறாகவும் இருந்ததாக ஆளுநர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, மக்களின் முக்கியப் பிரச்சனைகள்.
அந்த உரையில் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.தமிழக அரசு ரூ.12 லட்சம் கோடிக்கும் அதிகமான முதலீடுகளை ஈர்த்துள்ளதாக உரையில் குறிப்பிடப்பட்டிருந்த தகவல், உண்மைக்கு புறம்பானது என்று ஆளுநர் மாளிகை மறுத்துள்ளது.
மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு குறித்தும் ஆளுநர் மாளிகை கவலை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ‘போக்சோ’ (POCSO) சட்டத்தின் கீழான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் 55 சதவீதமும், பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் 33 சதவீதமும் அதிகரித்துள்ளதாக
அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தகைய சூழலிலும், பெண்கள் பாதுகாப்பு தொடர்பான பிரச்சனைகள் ஆளுநர் உரையில் முற்றிலுமாக புறக்கணிப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பள்ளி மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடையே போதைப் பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ள ஆளுநர், ஒரே ஆண்டில் 2000-க்கும் மேற்பட்டோர், குறிப்பாக இளைஞர்கள் தற்கொலை
செய்து கொண்டுள்ளதாகவும் வேதனை தெரிவித்துள்ளார். உண்மைக்கு மாறான தகவல்கள் மற்றும் மக்களின் அடிப்படைப் பிரச்சனைகளைப் பேசாத காரணத்தினாலேயே ஆளுநர் அவையிலிருந்து வெளியேறியதாக அந்த விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது…
