தமிழ் சினிமாவின் திரைக்கதை மன்னன் என்று அழைக்கப்படும் கே.பாக்யராஜ், திரைத்துறையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். 70, 80-களில் கதை, வசனம், இயக்கம், நடிப்பு எனப் பன்முகத் திறமையால் கொடிகட்டிப் பறந்த அவரது 50 ஆண்டு காலப் பயணத்தைச் சிறப்பிக்கும் வகையில் சென்னையில் பிரமாண்ட விழா நடைபெற்றது. இவ்விழாவில் ரஜினிகாந்த், கமல் ஹாசன், இளையராஜா உள்ளிட்ட திரைத்துறை ஜாம்பவான்கள் பலர் கலந்துகொண்டனர்.
விழாவில் பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பாக்யராஜுடனான நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார். அப்போது அவர், “பாக்யராஜிடம் உள்ள ஒரு பெரிய மைனஸ், அவர் எப்போதும் கதை, கதாபாத்திரம், சினிமா என்றே இருந்துவிட்டார். இதனால் அவருக்குப் பெயர், புகழ் கிடைத்த அளவுக்குப் பணம் சம்பாதிக்கத் தெரியவில்லை. அவரது படங்களின் மறு ஆக்க உரிமையை (Remake Rights) வாங்கிய வேற்று மொழிக்காரர்கள் தான் அதிகம் சம்பாதித்தார்கள்.
அந்த விஷயத்தில் அவர் அப்போதே கவனமாக இருந்திருந்தால், இன்று போட் கிளப்பில் ஐந்து வீடுகளும், போயஸ் கார்டனில் ஐந்து வீடுகளும் வாங்கிப் போட்டிருப்பார்,” என்று கலகலப்பாகக் குறிப்பிட்டார். ரஜினியின் இந்தப் பேச்சு அரங்கில் இருந்தவர்களிடையே சிரிப்பலையையும், சிந்தனையையும் ஏற்படுத்தியது…
