இந்திய அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா, சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் களமிறங்கியதன் மூலம், இந்தியாவுக்காக அதிக டி20 போட்டிகளில் விளையாடிய இரண்டாவது வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். இதுவரை 125 போட்டிகளில் விளையாடியிருந்த விராட் கோலியைப் பின்னுக்குத் தள்ளி, தனது 126-வது போட்டியில் விளையாடி ஹர்திக் இந்தச் சாதனையைப் படைத்துள்ளார்.
இந்த பட்டியலில் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா 159 போட்டிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். ஹர்திக் பாண்ட்யா இதுவரை 2,027 ரன்கள் குவித்துள்ளதோடு, பந்துவீச்சில் 102 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அணியின் முக்கியத் தூணாக விளங்குகிறார். இந்தியாவுக்காக 100-க்கும் மேற்பட்ட டி20 போட்டிகளில் விளையாடிய ரோஹித், கோலி, சூர்யகுமார் யாதவ் ஆகியோரது வரிசையில் தற்போது ஹர்திக்கும் இணைந்துள்ளார்.
இதே தொடரின் முதல் போட்டியில் கேப்டன் சூர்யகுமார் யாதவ் தனது 100-வது டி20 போட்டியில் விளையாடி சாதனை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் 2,788 ரன்களுடன் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர்கள் பட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்ளார். இந்த இரு வீரர்களின் சாதனைகளும் இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது…
