உடல் எடை குறைப்பு மற்றும் ஆரோக்கியமான வாழ்வியல் முறையை பின்பற்றுபவர்கள் மத்தியில், தற்போது ‘சியா விதைகள்’ (Chia Seeds) அத்தியாவசியமான உணவாக மாறிவிட்டது. ‘சூப்பர் ஃபுட்’ என்று கொண்டாடப்படும்.
இந்த விதைகளில் ஒமேகா-3, நார்ச்சத்து மற்றும் புரதச்சத்து நிறைந்துள்ளன. இருப்பினும், இது அனைவருக்கும் ஏற்றதல்ல என்றும், குறிப்பிட்ட உடல்நலப் பிரச்சனை உள்ளவர்கள் இதனைத் தவிர்ப்பது அவசியம் என்றும் மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
சியா விதைகளை யாரெல்லாம் உட்கொள்ளக்கூடாது என்பது குறித்த விரிவான தொகுப்பு இங்கே:
1. குறைந்த ரத்த அழுத்தம் உள்ளவர்கள் (Low Blood Pressure)
சியா விதைகள் இயற்கையாகவே ரத்தத்தை மெலிதுவாக்கும் தன்மை கொண்டவை. இவை ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் ஆற்றல் படைத்தவை. ஏற்கனவே குறைந்த ரத்த அழுத்தம் (Low BP) உள்ளவர்கள் அல்லது ரத்த அழுத்தத்திற்காக மாத்திரை எடுத்துக்கொள்பவர்கள் சியா விதைகளை உட்கொள்ளும்போது, ரத்த அழுத்தம் ஆபத்தான அளவிற்கு குறைய வாய்ப்புள்ளது.
2. செரிமான கோளாறு உள்ளவர்கள்
சியா விதைகளில் நார்ச்சத்து மிக அதிகமாக உள்ளது. இது குடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்றாலும், ஏற்கனவே வயிற்று உப்புசம், வாயுத் தொல்லை அல்லது தீவிர குடல் அழற்சி நோய் (IBD) உள்ளவர்களுக்கு இது எதிரிவினையை ஆற்றக்கூடும். அதிகப்படியான நார்ச்சத்து செரிமான மண்டலத்தை சிரமத்திற்கு உள்ளாக்கி, வயிற்று வலியை ஏற்படுத்தலாம்.
3. ரத்த அணுக்கள் உறையாமை (Blood Thinning Medication)
ரத்தம் உறைவதைத் தடுக்கும் மருந்துகளை (Blood Thinners) உட்கொள்பவர்கள், சியா விதைகளைத் தவிர்ப்பது அல்லது மருத்துவரின் ஆலோசனைப்படி மிகக்குறைவாக உண்பது நல்லது. ஏனெனில், சியா விதையில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் ரத்தத்தை மேலும் மெலிதாக்கி, காயம் ஏற்படும்போது ரத்தப்போக்கை அதிகரிக்கச் செய்யும் அபாயம் உள்ளது.
4. விழுங்குவதில் சிரமம் உள்ளவர்கள் (Swallowing Issues)
சியா விதைகள் தண்ணீரில் பட்டவுடன் தங்கள் எடையை விட 10 முதல் 12 மடங்கு நீரை உறிஞ்சி, ஜெல் போன்று விரிவடையும் தன்மை கொண்டவை. இதனைத் தண்ணீரில் ஊறவைக்காமல் அப்படியே சாப்பிட்டாலோ அல்லது சரியாக மெல்லாமல் விழுங்கினாலோ, அது உணவுக்குழாயில் விரிவடைந்து அடைப்பை ஏற்படுத்தக்கூடும். இதனால் மூச்சுத் திணறல் ஏற்படும் அபாயம் உள்ளது. குறிப்பாக சிறிய குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு இது ஆபத்தானது…
