Home லைப் ஸ்டைல் நிமிடத்திற்கு 11 கலோரிகள் வரை குறைக்கலாம் – படிக்கட்டு பயிற்சியின் ரகசியம்..!!

நிமிடத்திற்கு 11 கலோரிகள் வரை குறைக்கலாம் – படிக்கட்டு பயிற்சியின் ரகசியம்..!!

நவீன வாழ்க்கை முறையில் உடல் உழைப்பு குறைவு மற்றும் துரித உணவுகளால் பலரும் உடல் எடை அதிகரிப்புப் பிரச்சனையால் அவதிப்பட்டு வருகின்றனர். ஜிம் மற்றும் கடின உடற்பயிற்சிகளுக்கு மாற்றாக, தினமும் படிக்கட்டுகளில் ஏறி இறங்குவதே எடையைக் குறைக்கச் சிறந்த வழி எனப் பரிந்துரைக்கப்படுகிறது. நடைப்பயிற்சியை விடப் படிக்கட்டு ஏறுவது கலோரிகளை மிக விரைவாக எரிக்க உதவுகிறது; ஒரு நிமிடத்திற்குச் சுமார் 8 முதல் 11 கலோரிகள் வரை இதன் மூலம் குறைக்க முடியும். வாரத்தில் ஐந்து நாட்கள், தினமும் 30 நிமிடங்கள் இப் பயிற்சியைச் செய்வதன் மூலம் வாரத்திற்கு 200 கிராம் வரை எடையைக் குறைக்க வாய்ப்புள்ளது. ஆரம்பத்தில் கடினமாக இருந்தால், அவ்வப்போது ஓய்வெடுத்துப் பயிற்சியைத் தொடரலாம்.

எடை குறைப்பு மட்டுமின்றி, இதயத் துடிப்பைச் சீராக்கவும், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற அபாயங்களைக் குறைக்கவும் இந்தப் பயிற்சி உதவுகிறது. படிக்கட்டுகளில் ஏறும் போது உடலுக்குக் கூடுதல் ஆக்சிஜன் கிடைப்பதால் நுரையீரலின் பலம் அதிகரிக்கிறது. மேலும், இது தசை மற்றும் எலும்புகளின் வலிமையை மேம்படுத்தி, முதுகுவலி வராமல் தடுக்கிறது.

குறிப்பாக, மாதவிடாய் நின்ற பெண்களின் எலும்பு அடர்த்தியை அதிகரிக்க இது பெரிதும் உதவுகிறது. நீரிழிவு, இரத்த அழுத்தம் மற்றும் சில வகை புற்றுநோய்கள் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட நாள்பட்ட நோய்களின் அபாயத்தை இந்தப் பயிற்சி குறைப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, ஆரோக்கியமான வாழ்விற்கு லிஃப்டைத் தவிர்த்துப் படிக்கட்டுகளைப் பயன்படுத்துவதே சிறந்தது…

Exit mobile version