வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களுக்குரிய அதிகாரங்களை வழங்குவதற்காக, மாகாண சபைத் தேர்தலை அரசாங்கம் உடனடியாக நடத்த வேண்டும் என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார்.
கம்பஹா – திஹாரிய பகுதியில் நேற்று (08) நடைபெற்ற விசேட நிகழ்வொன்றில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
“வடக்கு, கிழக்கு மக்களின் நலன் கருதி மாகாண சபைத் தேர்தலை நடத்துவது அரசாங்கத்தின் பொறுப்பாகும். சிறிலங்கா பொதுஜன பெரமுனவைப் பொறுத்தவரை, நாட்டில் அடுத்து நடைபெறவுள்ள
எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்ளத் தயாராகவே உள்ளது” என்றார். மேலும், தேர்தலை எதிர்கொள்வதற்காக கிராமிய மட்டத்தில் கட்சிக் குழுக்களைப் பலப்படுத்தும் பணிகள் தற்போதே முன்னெடுக்கப்பட்டு வருவதாகச் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, எதிர்வரும் தேர்தலில் சிறிலங்கா பொதுஜன பெரமுன ஏனைய கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது தொடர்பில் இதுவரையில் எவ்வித உத்தியோகபூர்வ தீர்மானங்களும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் நாமல் ராஜபக்ச இதன்போது தெளிவுபடுத்தினார்…
