இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீராங்கனையும், ஒலிம்பிக் பதக்க வெற்றியாளருமான சாய்னா நேவால், சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார். 2012 லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலம் மற்றும் 2018 காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்த அவர், கடந்த சில ஆண்டுகளாகத் தீவிர மூட்டுப் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்தார்.
இது குறித்துப் பேசிய சாய்னா, “எனது மூட்டு குருத்தெலும்பு முழுமையாகச் சிதைந்துவிட்டது. மூட்டுவலி காரணமாக நீண்ட நேரம் பயிற்சி செய்ய முடிவதில்லை. உலக அளவில் போட்டியிட தினமும் 8 மணி நேரம் பயிற்சி தேவை, ஆனால் என்னால் தற்போது ஒரு மணி நேரம் கூட ஈடுகொடுக்க முடியவில்லை. எனவே, அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லாமலேயே விளையாட்டில் இருந்து விலக முடிவு செய்தேன்,” என்று உருக்கமாகத் தெரிவித்தார்.
2023 சிங்கப்பூர் ஓபனுக்குப் பிறகு அவர் எந்தப் போட்டியிலும் பங்கேற்கவில்லை. “என் விருப்பப்படியே விளையாட்டுக்குள் வந்தேன், இப்போது என் விருப்பப்படியே விடைபெறுகிறேன். என்னால் முடிந்ததைச் செய்துவிட்டேன்,” என்று அவர் கூறியுள்ளது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது…
