சர்வதேச அரசியல் அரங்கில் மீண்டும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள முக்கியத்துவம் வாய்ந்த சாகோஸ் (Chagos) தீவுகளை, மொரீஷியஸ் நாட்டிடம் ஒப்படைக்க பிரிட்டன் முடிவு செய்திருந்தது.
பிரிட்டனின் இந்த முடிவை மிகக் கடுமையாக விமர்சித்துள்ள டிரம்ப், இது ஒரு “முட்டாள்தனமான செயல்” என்று குறிப்பிட்டுள்ளார். பூகோள ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த இந்தத் தீவுகளை விட்டுக்கொடுப்பது தவறான முன்னுதாரணம் என்பது அவரது கருத்தாக உள்ளது.
இதற்கிடையில், டிரம்ப்பின் இந்தக் கருத்துக்கு மொரீஷியஸ் அரசு தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. “சாகோஸ் தீவுகள் மீதான இறையாண்மை (Sovereignty) என்பது முடிவு செய்யப்பட்ட ஒன்று. இது குறித்து இனி எந்த விவாதத்திற்கும் இடமில்லை,” என மொரீஷியஸ் அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
சாகோஸ் தீவு விவகாரம் மீண்டும் சூடுபிடித்துள்ள நிலையில், அமெரிக்கா மற்றும் மொரீஷியஸ் இடையேயான இந்த வார்த்தைப் போர் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது.

