இன்றைய சூழலில் பலரையும் வாட்டி வதைக்கும் பிரச்சனைகளாக ரத்த சோகை மற்றும் முடி உதிர்வு உள்ளன. இதற்கு மருந்துகளை விட, உணவே சிறந்த தீர்வாக அமைகிறது. அந்த வகையில், இரும்புச்சத்து அதிகம் கொண்ட முருங்கை இலைகளைத் தினமும் உணவில் சேர்ப்பது ரத்த சோகையை நீக்கி, உடலில் நல்ல ரத்தத்தை அதிகரிக்க உதவும். மேலும், இது முடி வளர்ச்சியைத் தூண்டவும், நரைமுடியைப் போக்கவும் வல்லது.முருங்கைக்கீரையை நேரடியாகச் சாப்பிடத் தயங்குபவர்களுக்கு, அதைச் சுவையான தோசையாகச் செய்து கொடுக்கலாம்.
இதற்குத் தேவையான பொருட்கள்: தோசை மாவு – 2 கப், முருங்கைக்கீரை – 2 கைப்பிடி, சீரகம் மற்றும் மிளகு – தலா 1 ஸ்பூன், பூண்டு – 4 பல் மற்றும் தேவையான அளவு எண்ணெய்.முதலில் வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம், மிளகு மற்றும் பூண்டு ஆகியவற்றைச் சேர்த்து வதக்க வேண்டும். பின்னர் சுத்தம் செய்து வைத்துள்ள முருங்கைக்கீரையையும் அதனுடன் சேர்த்து லேசாக வதக்கவும். இந்தக் கலவை ஆறியதும்,
மிக்ஸியில் போட்டுத் தண்ணீர் சேர்க்காமல் அல்லது சிறிது தண்ணீர் தெளித்து பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.அரைத்த விழுதை எடுத்து வைத்திருக்கும் தோசை மாவில் சேர்த்துக் கட்டிகள் இல்லாமல் நன்றாகக் கலக்கவும். பின்னர் அடுப்பில் தோசைக் கல்லை வைத்துச் சூடானதும், வழக்கமான தோசை போல வார்த்து இருபுறமும் எண்ணெய் ஊற்றி வேக வைத்து எடுக்கவும். இப்போது நாவிற்கு ருசியான மற்றும் உடலுக்கு ஆரோக்கியமான முருங்கைக்கீரை தோசை தயார்…

