பாஜகவின் புதிய தேசியத் தலைவராக நிதின் நபின் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, தமிழகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட ஐந்து மாநிலத் தேர்தல் பணிகளில் அக்கட்சி தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இந்நிலையில், விரைவில் அறிவிக்கப்படவுள்ள பாஜக தேசிய அணியில், தமிழகத்தின் முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்த ‘பொதுச்செயலாளர்’ பதவி வழங்கப்பட உள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 45 வயதான நிதின் நபின் தலைவரான நிலையில், 41 வயதான அண்ணாமலைக்கு அடுத்த முக்கிய இடமான இந்த பதவி வழங்கப்படுவது,
கட்சியில் இளைஞர்களுக்கு அளிக்கப்படும் முன்னுரிமையை உணர்த்துகிறது.சமீபத்தில் தமிழகம் வந்த பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா ஆகியோர் திமுகவை கடுமையாக விமர்சித்தது, தேர்தல் களம் சூடுபிடித்துள்ளதைக் காட்டுகிறது. தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியை விரிவுபடுத்தி, திமுகவை வீழ்த்த பாஜக வியூகம் வகுத்துள்ளது. அண்ணாமலை மாநிலத் தலைவராக இருந்தபோது பாஜகவின் வாக்கு வங்கியை 3%லிருந்து 11% ஆக உயர்த்தியதை மேலிடம் வெகுவாகப் பாராட்டியுள்ளது.
தேசியப் பணிகளில் கவனம் செலுத்தவிருப்பதால், அண்ணாமலை இம்முறை சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது. ஆக்ரோஷமான அரசியல் மற்றும் டெல்லி மேலிடத்துடனான நெருக்கம் காரணமாக அண்ணாமலையின் இந்தத் தேசிய வருகை தமிழக அரசியலில் முக்கியத் திருப்பமாகப் பார்க்கப்படுகிறது…
