தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகப் பனி மற்றும் வெயிலின் தாக்கம் மாறி மாறி வாட்டி வதைத்து வந்த நிலையில், மக்களுக்குக் குளிர்ச்சியான செய்தியைச் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. இதன்படி, தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்குப் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது.இன்று (ஜனவரி 26) தமிழகத்தின் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நாளை (ஜனவரி 27) மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இடையில் ஜனவரி 28 முதல் 30 வரை வறண்ட வானிலை நிலவினாலும், மீண்டும் ஜனவரி 31 மற்றும் பிப்ரவரி 1 ஆகிய தேதிகளில் மழை பெய்யக்கூடும்.சென்னையைப் பொறுத்தவரை இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்;
சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. இதனிடையே, தென் தமிழகக் கடலோரப் பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், ஜனவரி 30 வரை மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு மழை அறிவிப்பு வெளியாகியுள்ளதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்…

