தமிழ் திரையுலகின் பிரபல பாடகர் கிரிஷ், திருவண்ணாமலை அண்ணாமலையார் மீது தான் கொண்டுள்ள அசைக்க முடியாத பக்தி குறித்து உருக்கமாகப் பேசியுள்ளார். கடந்த 18 ஆண்டுகளாகத் தான் தொடர்ந்து திருவண்ணாமலைக்கு வந்து செல்வதாகவும், மாதத்திற்கு இருமுறை நிச்சயம் அண்ணாமலையாரைத் தரிசிப்பேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். பொதுவாக “சிவன் எல்லாவற்றையும் துறந்தவர், அவர் என்ன கொடுப்பார்?” என்று பலர் கூறுவார்கள், ஆனால் அண்ணாமலையாரைப் போல வாரி வழங்கும் கடவுளைப் பார்க்கவே முடியாது என்று அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
தமது கலைப் பயணத்தின் தொடக்கமே அண்ணாமலையார் இடத்திலிருந்துதான் ஆரம்பித்ததாக அவர் கூறியுள்ளார். 18 ஆண்டுகளுக்கு முன்பு இத்தலத்திற்கு வந்து வேண்டிக்கொண்ட பிறகுதான், தமக்குச் சினிமாவில் முதல் பாடல் பாடும் வாய்ப்பு கிடைத்ததாக அவர் ரகசியத்தைப் பகிர்ந்துள்ளார். அன்றிலிருந்து இன்று வரை எத்தகைய சூழலிலும் அண்ணாமலையார் தரிசனத்தைத் தான் கைவிடுவதில்லை என்றும்,
தமது வாழ்வின் ஒவ்வொரு உயர்வுக்கும் அவரே காரணம் என்றும் கிரிஷ் தெரிவித்துள்ளார். திரையுலகப் பிரபலங்கள் பலரும் ஆன்மீகப் பாதையில் நாட்டம் காட்டி வரும் நிலையில், கிரிஷ் அவர்களின் இந்த 18 ஆண்டுகாலத் தொடர் பயணம் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது…

