தமிழக அரசியல் களத்தில் தனக்கென ஒரு பாதையை வகுத்து வரும் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், இன்று சேலத்தில் நடைபெற்ற கட்சியின் பிரம்மாண்ட தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் கலந்து கொண்டார். ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் உரையாற்றிய அவர், தேர்தல் கால ஊழல்கள் மற்றும் வாக்குக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் குறித்து மிகக் காட்டமாகப் பேசினார்.அவர் பேசுகையில், “தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் ஓட்டுக்காகப் பணம் கொடுக்க முன்வந்தால், அந்தப் பணத்தை வாங்கிக் கொள்ளுங்கள்; அது உங்கள் வரிப்பணம். ஆனால், பணத்தைப் பெற்றுக்கொண்டு அவர்களுக்கு வாக்களிக்காமல், அவர்கள் காது கிழிந்து போகும் அளவுக்கு விசிலை ஊதி அவர்களை திருப்பி அனுப்புங்கள்” என்று ஒரு புதிய யுக்தியைத் தொண்டர்களுக்கு வழங்கினார்.
விஜய்யின் இந்த ‘விசில்’ ஐடியா கூட்டத்தில் இருந்தவர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. “பணம் வாங்குவது தவறல்ல, ஆனால் பணத்திற்காக நேர்மையை விற்பதுதான் தவறு” என்ற தொனியில் அமைந்த அவரது பேச்சு, மற்ற அரசியல் கட்சிகளிடையே பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.
தேர்தல் நெருங்கும் வேளையில், தவெக தலைவர் விஜய்யின் இந்த அதிரடி நிலைப்பாடு இளைஞர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஊழலற்ற அரசியலை முன்னெடுப்பதே தனது நோக்கம் என்பதை இந்த உரையின் மூலம் விஜய் மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளார்…
