லண்டனில் உள்ள ஒரு பிரபல KFC உணவகத்தில் பணியாற்றிய மதுரை இளைஞரை, இனவெறியுடன் பேசியும், அடிப்படை உரிமைகளை மறுத்தும் அவமதித்த இலங்கை தமிழரான மேலாளருக்கு, லண்டன் நீதிமன்றம் 81 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

பின்னணி: மதுரையைச் சேர்ந்த மாதேஷ் ரவிச்சந்திரன் என்பவர், லண்டனில் உள்ள ஒரு KFC கிளை உணவகத்தில் பணியாற்றி வந்தார். அதே உணவகத்தில் இலங்கைத் தமிழரான கஜன் என்பவர் மேலாளராகப் பணியாற்றி வந்தார். கடந்த 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் மாதேஷ் பணியில் சேர்ந்தபோது, கஜன் தான் அவரை நேர்காணல் செய்து வேலைக்குத் தேர்வு செய்தார்.

இனவெறித் தாக்குதல்: மாதேஷ் பணியில் சேர்ந்த சில மாதங்களிலேயே மேலாளர் கஜன் அவருக்குக் கூடுதல் வேலை நேரத்தை ஒதுக்கியுள்ளார். அதுமட்டுமின்றி, மருத்துவ விடுப்பு மற்றும் அவசரக்கால விடுப்புகளை மாதேஷிற்கு வழங்காமல் தொடர்ந்து துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து மாதேஷ் கேள்வி எழுப்பியபோது, மேலாளர் கஜன் மிகவும் திமிராகவும், இழிவுபடுத்தும் விதமாகவும் பேசியுள்ளார். “நீயெல்லாம் ஒரு அடிமை, இந்தியர்கள் அனைவரும் மோசடிக்காரர்கள்” என்று மாதேஷை அவரது இனத்தை வைத்து கடுமையாக அவமதித்துள்ளார். அதே சமயம், அங்கு பணியாற்றிய மற்ற இலங்கைத் தமிழர்களுக்கு விடுப்பு வழங்கிய கஜன், இந்தியத் தமிழரான மாதேஷிற்கு மட்டும் தொடர்ந்து உரிமைகளை மறுத்து மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளார்.

நீதிமன்றத் தீர்ப்பு: இந்தக் கொடுமைகளைத் தாங்க முடியாமல் மாதேஷ் தனது பணியை ராஜினாமா செய்ய முடிவெடுத்தார். ஆனால், அவர் முறைப்படி விலக முற்பட்டபோது, அவருக்குக் கிடைக்க வேண்டிய ஊதியப் பயன்கள் மற்றும் விடுப்பு காலச் சம்பளம் போன்றவற்றை வழங்காமல் கஜன் அவரைத் தன்னிச்சையாகப் பணியிலிருந்து நீக்கினார்.

இதையடுத்து, மாதேஷ் ரவிச்சந்திரன் லண்டன் தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பால் அபோட், மாதேஷ் ரவிச்சந்திரனைப் பணியில் இருந்து நீக்கியது சட்டவிரோதமானது என்றும், மேலாளர் கஜன் இனப்பாகுபாடு காட்டியது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதற்குத் தீர்வாக, மாதேஷிற்கு 66,800 பவுண்டுகளை (இந்திய மதிப்பில் சுமார் 81 லட்சம் ரூபாய்) இழப்பீடாக வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதிர்ச்சியில் உலகத் தமிழர்கள்: தமிழகத் தமிழர்களும், இலங்கைத் தமிழர்களும் தொப்புள்கொடி உறவுகளாகவும், ஒருவருக்கொருவர் துணையாகவும் இருந்து வரும் சூழலில், லண்டனில் ஒரு தமிழ் இளைஞரை மற்றொரு தமிழரே இனவெறியுடன் பேசியுள்ளது உலகெங்கிலும் உள்ள தமிழர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here