அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில், அதிகரித்து வரும் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த ஆன்லைன் முன்பதிவு வசதியைக் கொண்டு வர வேண்டும் எனப் பக்தர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
திருச்செந்தூர் கோவிலுக்குத் தமிழகம் மட்டுமின்றிப் பிற மாநிலங்களிலிருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். குறிப்பாகச் சனி, ஞாயிறு உள்ளிட்ட வார விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை விடுமுறை காலங்களில் வழக்கத்தை விடப் பல மடங்கு கூட்டம் அதிகமாகக் காணப்படுகிறது.
விடுமுறை நாட்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்ய வேண்டிய சூழல் நிலவுகிறது. இதனால் முதியவர்கள், குழந்தைகள் மற்றும் பெண்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். கூட்ட நெரிசலைப் பயன்படுத்திச் சமூக விரோத செயல்கள் நடைபெறவும் வாய்ப்புள்ளதாகக் கவலை தெரிவிக்கப்படுகிறது.
தற்போது திருப்பதி உள்ளிட்ட பல்வேறு முக்கியத் திருக்கோவில்களில் ஆன்லைன் மூலம் தரிசன நேரத்தை முன்பதிவு செய்யும் வசதி நடைமுறையில் உள்ளது. அதே போன்ற ‘ஆன்லைன் புக்கிங்’ (Online Booking) முறையைத் திருச்செந்தூர் கோவில் நிர்வாகமும் அமல்படுத்த வேண்டும் எனப் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இம்முறை நடைமுறைக்கு வந்தால், பக்தர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் வந்து வரிசையில் காத்திருப்பதைத் தவிர்த்துச் சுலபமாகத் தரிசனம் செய்ய முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கோவில் நிர்வாகம் இந்தப் புகாருக்கு உரிய நடவடிக்கை எடுத்துப் பக்தர்களின் சிரமத்தைக் குறைக்க முன்வருமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.











































