இன்றைய காலகட்டத்தில் வரன் தேடுவது என்பது பெரும் சவாலாக மாறியுள்ளது. மேட்ரிமோனி தளங்கள் முதல் தரகர்கள் வரை பல வழிகளில் முயற்சித்தும் பலன் கிடைக்காததால், கடலூரைச் சேர்ந்த ஒரு இளைஞர் தனது திருமணத்திற்காக எடுத்த நூதன முயற்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
யார் இந்த பிரபு? கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிரபு என்ற இளைஞர், தற்போது சென்னையில் உள்ள தாம்பரம் பகுதியில் வசித்து வருகிறார். கடந்த மூன்று ஆண்டுகளாகத் தனது திருமணத்திற்காகப் பல இடங்களில் பெண் தேடியும், அவருக்குத் தகுந்த வரன் அமையவில்லை. ஜோடி ஆப், தமிழ் மேட்ரிமோனி மற்றும் பல்வேறு திருமணத் தரகர்களிடம் பணம் கட்டியும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
நூதன விளம்பரம்: இதனால் விரக்தியடைந்த பிரபு, தனது சொந்த ஆட்டோவில் “மணப்பெண் தேவை” என்ற விளம்பரப் பதாகையை (Poster) ஒட்டியுள்ளார். அதில் தனது புகைப்படங்கள், செல்போன் எண் மற்றும் சமூக வலைதள கணக்கு விவரங்களைப் பகிர்ந்துள்ளார். இதுமட்டுமின்றி, எப்போது பெண் கிடைத்தாலும் உடனடியாகத் திருமணம் செய்து கொள்ளத் தயாராக இருக்கும் விதமாக, கையில் ‘தாலி’யுடனேயே ஊர் சுற்றி வருகிறார்.
ஆசை மற்றும் வசதிகள்: தனது ஆசை குறித்து பிரபு கூறுகையில், “நகைகள் போட்டுத் திருமணம் செய்ய முடியாத ஏழ்மை நிலையில் உள்ள பெண்கள் அல்லது நன்கு படித்த பெண்கள் என யாராக இருந்தாலும், அவர்களுக்கு என்னைப்பிடித்திருந்தால் உடனடியாகத் திருமணம் செய்து கொள்ளத் தயாராக இருக்கிறேன். எனக்கென சொந்தமாக ஆட்டோ உள்ளது. ஊரில் ஒரு ஏக்கர் நிலம், வீடு மற்றும் பிளாட் உள்ளது. கார்பெண்டர் வேலை செய்து வருகிறேன். எனக்கு எந்தவிதக் கெட்ட பழக்கங்களும் இல்லை,” எனத் தெரிவித்துள்ளார்.











































