அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களையே தற்போதைய முதல்வர் ஸ்டாலின் பின்பற்றி வருவதாகவும், எதிர்க்கட்சியாக இருந்தபோது பேசியதை ஆளுங்கட்சியான பிறகு திமுக மறந்துவிட்டதாகவும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாகச் சாடியுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், வாழவந்தான் குப்பத்தில் நடைபெற்ற அதிமுக மகளிர் அணி பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர், திமுக அரசின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்தார்.
லேப்டாப் திட்டம் – முதல்வரின் ஒப்புதல்: கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “அதிமுக ஆட்சியில் மாணவர்களுக்கு மடிக்கணினி (லேப்டாப்) வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டபோது, அதனைப் பற்றி விமர்சித்தவர் தற்போதைய முதல்வர் மு.க. ஸ்டாலின். ஆனால், இன்று அதே திட்டம் சிறப்பான திட்டம் என்பதை ஏற்றுக்கொண்டு, மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி வருகிறார். அதிமுகவின் 10 ஆண்டு கால ஆட்சியில் 52 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு லேப்டாப் வழங்கப்பட்டது. ஆனால், தற்போதைய திமுக ஆட்சியில் இறுதியாண்டு படிக்கும் கல்லூரி மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது,” என்று சுட்டிக்காட்டினார்.
கனிமொழிக்கு நினைவூட்டல்: தொடர்ந்து மதுவிலக்கு கொள்கை குறித்துப் பேசிய அவர், திமுக எம்பி கனிமொழி கடந்த காலங்களில் பேசியதை நினைவுகூர்ந்தார். “அதிமுக ஆட்சியில் இருந்தபோது, தமிழகத்தில் அதிக டாஸ்மாக் கடைகள் இருப்பதால் இளம் விதவைகள் அதிகம் உள்ளதாக கனிமொழி குற்றம் சாட்டினார். ஆனால், இப்போது திமுக ஆட்சியில் எத்தனை மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன? இப்போதும் பெண்கள் இளம் விதவைகளாக மாறும் நிலை தொடரத்தானே செய்கிறது? ஆளுங்கட்சி ஆவதற்கு முன் ஒரு பேச்சு, ஆனபின்பு ஒரு பேச்சு என திமுக இரட்டை வேடம் போடுகிறது,” என்று எடப்பாடி பழனிசாமி சரமாரியாகக் கேள்வி எழுப்பினார்.










































