ஏழாம் படைவீடு என்று போற்றப்படும் கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூசத் திருவிழாவின் ஒரு முக்கிய நிகழ்வாக இன்று திருக்கல்யாண உற்சவம் மிகச்சிறப்பாக நடைபெற்றது.உலகப்புகழ் பெற்ற இக்கோவிலில் தைப்பூசத் திருவிழா கடந்த சில நாட்களுக்கு முன்பு கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் ஆறாம் நாளான இன்று, முருகப்பெருமானுக்கு உகந்த தைப்பூசத் திருநாளை முன்னிட்டு, வள்ளி மற்றும் தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.
முன்னதாக, சுவாமிக்கும் அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் ஆராதனைகள் நடத்தப்பட்டன. மங்கல வாத்தியங்கள் முழங்க, வேத மந்திரங்கள் ஓத, வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மணமேடையில் திருக்கல்யாணம் இனிதே அரங்கேறியது. இந்த நன்னாளில் சுவாமி தரிசனம் செய்வதற்காக அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலைக்கோவிலில் குவிந்தனர்.
பக்தர்கள் ‘அரோகரா’ கோஷத்துடன் முருகப்பெருமானின் திருமணக் கோலத்தைக் கண்டு பரவசமடைந்தனர். திருக்கல்யாணத்தை முன்னிட்டு பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. விழாவிற்கான விரிவான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் அறங்காவலர் குழுவினர் செய்திருந்தனர். நாளை தைப்பூசத்தின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது…
