இந்தியாவில் நடுத்தர மக்கள் அதிகம் பயன்படுத்தும் பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன்களின் விலையைக் குறைக்கும் வகையில், அதற்கான ஜிஎஸ்டி (GST) வரியைக் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழுந்துள்ளது.நாட்டில் தற்போது சரிந்து வரும் மொபைல் போன்களின் விற்பனையை மீண்டும் சரிசெய்து, சந்தையை முறைப்படுத்தவும், வர்த்தகத்தை அதிகரிக்கவும் இந்த வரிக்குறைப்பு நடவடிக்கை மிகவும் அவசியம் என்று வல்லுநர்கள் கருதுகின்றனர்.இதன் அடிப்படையில், இந்தியாவில் ரூ.25,000க்கு உட்பட்ட விலையில் விற்பனை செய்யப்படக்கூடிய அனைத்து மொபைல் போன்களுக்கான ஜிஎஸ்டி வரியை தற்போதிருக்கும் 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகக் குறைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இந்த அதிரடியான வரிக்குறைப்புப் பரிந்துரையை ‘ஜிடி பாரத்’ (GT Bharat) மற்றும் ‘பிடபிள்யூஐஎஃப்’ (PWIF) ஆகிய முக்கியப் பொருளாதார மற்றும் வணிகப் பிரதிநிதித்துவ அமைப்புகள் ஒன்றிய அரசுக்கு அதிகாரப்பூர்வமாக முன்வைத்துள்ளன.தற்போது ஸ்மார்ட்போன் சந்தையில் நுகர்வோரின் வாங்கும் திறன் சற்று மந்தமாக உள்ளதால், வரியைக் குறைப்பது நடுத்தர மக்களின் சுமையைக் குறைப்பதுடன், புதிய போன்களின் விற்பனையை கணிசமாக உயர்த்த உதவும் என்று அந்த அமைப்புகள் தெரிவித்துள்ளன.
இருப்பினும், இந்த ஜிஎஸ்டி வரிக்குறைப்புப் பரிந்துரைகள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பாக மத்திய நிதியமைச்சகம் அல்லது ஜிஎஸ்டி கவுன்சில் தரப்பில் இருந்து இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.மத்திய அரசின் வரவிருக்கும் நிதிநிலைக் கூட்டத்தொடர் அல்லது அடுத்தடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டங்களில் இக்கோரிக்கை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படுமா என்ற எதிர்பார்ப்பு மொபைல் போன் தயாரிப்பாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது…

