இந்திய குடிமக்களின் மிக முக்கியமான முதன்மை அடையாள ஆவணமாகத் திகழும் ஆதார் அட்டையில் உள்ள விவரங்களை எளிதாக மாற்றும் வகையில் புதிய மொபைல் செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டது.ஆதார் அட்டையில் உள்ள முகவரி, பெயர், பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் உள்ளிட்ட விவரங்களை திருத்தம் செய்ய பொதுமக்கள் ஆதார் சேவை மையங்களுக்கு நேரில் சென்று நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் நிலவி வந்தது.இத்தகைய சிரமங்களைக் குறைக்கவும், சாமானிய மக்கள் தங்களின் வீடுகளில் இருந்தபடியே ஆதார் விவரங்களைப் பாதுகாப்பாகப் புதுப்பிக்கவும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) இந்த மொபைல் செயலியை மேம்படுத்தி வெளியிட்டது.பொதுமக்களின் டிஜிட்டல் தேவைகளை எளிமையாக்கும் நோக்கில் சமீபத்தில் வெளியிடப்பட்ட இந்த புதிய ஆதார் மொபைல் செயலிக்கு நாடு முழுவதிலும் உள்ள மக்களிடையே மாபெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
செயலி அறிமுகப்படுத்தப்பட்ட குறுகிய காலத்திலேயே, இதுவரை 4 கோடிக்கும் அதிகமான பயனர்கள் இதனைத் தங்களின் ஸ்மார்ட்போன்களில் பதிவிறக்கம் (Download) செய்து சாதனை படைத்துள்ளனர்.இந்த மொபைல் செயலி மூலமாகப் பயோமெட்ரிக் அல்லாத பிற முக்கியத் தகவல்களை மக்கள் மிக விரைவாகவும், எளிய வழிமுறைகளிலும் ஆன்லைன் வாயிலாகவே புதுப்பித்துக் கொள்ள முடிகிறது.மேலும், ஓடிபி (OTP) மற்றும் முக அடையாளச் சரிபார்ப்பு (Face Authentication) போன்ற அதிநவீன பாதுகாப்பு அம்சங்கள் இதில் சேர்க்கப்பட்டுள்ளதால் பயனர்களின் தகவல்கள் பாதுகாப்பாகப் பராமரிக்கப்படுகின்றன.
ஆதார் சேவை மையங்களில் நிலவும் நீண்ட நேரக் காத்திருப்பைத் தவிர்த்து, ஸ்மார்ட்போன் மூலமாகவே தங்களது விவரங்களை உடனடியாகத் திருத்திக் கொள்ள இந்தச் செயலி பெரிதும் உதவிகரமாக உள்ளது எனப் பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்ட இந்த முயற்சி, குறுகிய காலத்தில் 4 கோடி பதிவிறக்கங்களைக் கடந்துள்ளதற்குப் பல்வேறு தொழில் நுட்ப வல்லுநர்களும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்…

